வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி - தம்பதிக்கு வலைவீச்சு


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி - தம்பதிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி,

தேனி அன்னஞ்சி விலக்கு என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவை சேர்ந்தவர் செல்வக்கண்ணன் (வயது 29). இவருக்கு தேனி ரத்தினம் நகரை சேர்ந்த கார்த்திக், அவருடைய மனைவி ஜெயா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு வெளிநாட் டில் ஆட்கள் தெரியும் என்றும், டிரைவர், எலக்ட்ரீசியன், மிஷின் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை என்றும் தெரிவித் துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் செல்வக்கண்ணனும் அவர்கள் பேச்சை நம்பியுள்ளார். மேலும் உறவினர்களிடம் தெரிவித்து வேலைக்கு அழைத்துள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட தம்பதியினர் செல்வக்கண்ணன் மற்றும் அவருடைய உறவினர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர், குறிப்பிட்ட கால இடைவெளியில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. அப்போது தான் அவர்கள் பணத்தை மோசடி செய்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் மற்றும் ஜெயாவை சந்தித்து தாங்கள் கொடுத்த பணத்தை தருமாறு செல்வக்கண்ணன் மற்றும் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த அல்லிநகரம் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story