திருவண்ணாமலையில் இடி மின்னலுடன் மழை: மின்சாரம் தாக்கி கடைக்காரர் சாவு


திருவண்ணாமலையில் இடி மின்னலுடன் மழை: மின்சாரம் தாக்கி கடைக்காரர் சாவு
x
தினத்தந்தி 15 Jun 2019 4:15 AM IST (Updated: 14 Jun 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்சாரம் தாக்கி குளிர்பான கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பலத்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவண்ணாமலை பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

பலத்த காற்றினால் கலெக்டர் அலுவலகம் அருகில் மரங்கள் மற்றும் 2 மின் கம்பங்கள் சாய்ந்தன. மழையினால் திருவண்ணாமலையில் சில இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. மழை நின்ற பிறகு மின் வினியோகம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை புதுவாணியங்குள தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவர் பஸ் நிலையத்தில் குளிர்பான கடை வைத்து உள்ளார். மழையின் காரணமாக நேற்று முன்தினம் இவரது கடையில் ஒரு அடிக்கு தண்ணீர் தேங்கியது.

மழையின் போது நிறுத்தப்பட்ட மின்சாரம் மழை நின்றதும் வந்தது. அப்போது கடையில் ஏற்பட்ட மின் கசிவால் சதீஷ் மீது மின்சாரம் தாக்கியது. பின்னர் உடனடியாக பஸ் நிலையத்தில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவண்ணாமலை - 41, கீழ்பென்னாத்தூர் - 37.2, ஆரணி - 18, போளூர் - 11.2, வெம்பாக்கம் - 5.7, சாத்தனூர் அணை - 5, தண்டராம்பட்டு - 2.4, செய்யாறு- 2.

Next Story