அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழா அரூரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவருடைய முன்னிலையில் சம்பத்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வக்கீல் பசுபதி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் மதிவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் போதுமான அளவில் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினை ஏற்படுவது கண்டறியப்பட்டால் உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்.பில். பட்டம் முடித்தவர்கள் கல்லூரிகளில் பணிபுரியலாம் என்ற விதிமுறை கடந்த 2009-ம் ஆண்டு வரை இருந்தது. அதன்பிறகு பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி, ஸ்லெட், நெட் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை தகுதி தேர்வு மூலம் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
Related Tags :
Next Story