கோபி அருகே பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர்; பயணிகள் பாராட்டு
கோபி அருகே பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
கடத்தூர்,
கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த பஸ் கோபி அருகே உள்ள குருமந்தூர் வந்தபோது, அதில் அந்த பகுதியை சேர்ந்த தனலட்சுமி (வயது 45) என்ற பெண்ணும், மற்றொரு பெண்ணும் ஏறினர்.
அப்போது அந்த பஸ்சில் 73 பயணிகள் இருந்தனர். பஸ்சின் முன் பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்த தனலட்சுமி ஒரு பையில் ரூ.40 ஆயிரத்தை வைத்து அதன் மீது பேப்பரை போட்டு மறைத்து வைத்திருந்தார்.
கோபி காலேஜ் பிரிவு நிறுத்தம் வந்ததும், தனலட்சுமியும், அவருடன் வந்த பெண்ணும் பஸ்சில் இருந்து இறங்கி நடக்க தொடங்கினர். சிறிது தூரம் சென்றதும் தன் கையில் பை இல்லாததை கண்டதும் தனலட்சுமி பதைபதைத்தார். மேலும் பதற்றத்துடன் அவர் பணப்பை கீழே விழுந்து விட்டதா? என சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது தான் அவருக்கு பணப்பையை பஸ்சில் தவற விட்டது நினைவுக்கு வந்தது.
உடனே பின்னால் வந்த பஸ்சில் ஏறி கோபி பஸ் நிலையத்துக்கு தனலட்சுமி வந்தார். ஆனால் அந்த பஸ் அங்கு வரவில்லை. இதனால் அவருக்கு மேலும் பதற்றம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த தனியார் பஸ் நேர காப்பாளரிடம் (டைம் கீப்பர்) அந்த தனியார் பஸ் குறித்து கேட்டார்.
உடனே அந்த தனியார் பஸ் நேரம் காப்பாளர், இதுபற்றி பஸ்சின் உரிமையாளர் அருணுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அருண், செல்போன் மூலம் தன்னுடைய பஸ் கண்டக்டரான சவுந்தரராஜனிடம் பணம் உள்ள பை குறித்து கேட்டார். அதற்கு கண்டக்டர் சவுந்தரராஜன், ‘பணம் உள்ள பை பஸ்சில்தான் உள்ளது. தொலையவில்லை. நான் பத்திரமாக எடுத்து வைத்துள்ளேன். தற்போது பெட்ரோல் பங்க்கில் பஸ்சுக்கு டீசல் நிரப்பி கொண்டு உள்ளேன். டீசல் நிரப்பியதும் பஸ் நிலையம் செல்வேன். அங்கு சென்றதும் அந்த பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிடுகிறேன்,’ என்றார். இதைத்தொடர்ந்து பணம் பத்திரமாக பஸ் கண்டக்டரான சவுந்தரராஜனிடம் உள்ளது என தனலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
பின்னர் பஸ்சை எதிர்பார்த்து அவர் அங்கு காத்திருந்தார். சிறிது நேரத்தில் பஸ் வந்ததும் தனலட்சுமி ஓடோடிச்சென்று கண்டக்டர் சவுந்தரராஜனிடம் பணப்பையை கேட்டார். இது உங்கள் பணம் என்பதற்கான ஆதாரத்தை கொடுங்கள் என அவரிடம் சவுந்தரராஜன் கேட்டார். உடனே தனலட்சுமி, ‘இது மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வசூலித்த பணம். இந்த பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்கிறேன்’ என்றதுடன், தன்னிடம் இருந்த வங்கி புத்தகத்தையும் காண்பித்தார். உடனே அந்த பணத்தை தனலட்சுமியிடம் சவுந்தரராஜன் வழங்கினார். பஸ்சில் தவற விட்ட பணத்தை பத்திரமாக எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டரை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.