மாவட்ட செய்திகள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி குறித்து மாவட்ட வன அதிகாரி ஆய்வு + "||" + Anamalai Tigers in the archive Wildlife survey work District Forest Officer Inspection

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி குறித்து மாவட்ட வன அதிகாரி ஆய்வு

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி குறித்து மாவட்ட வன அதிகாரி ஆய்வு
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்று வரும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட வன அதிகாரி ஆய்வு செய்தார்.
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் நடப்பாண்டிற்கான கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் வருகிற 17 -ந் தேதி வரையில் நடைபெற உள்ளது.

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் மொத்தமுள்ள 21 பீட்டுகளிலும் கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 126 பேர் 42 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைதடுப்பு காவலர், தன்னார்வலர், கல்லூரி மாணவ-மாணவிகள், செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ் கருவி உதவியுடன் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

கணக்கெடுப்பு பணியின் போது மாமிச உண்ணிகளின் தடயங்களை அவர்கள் பதிவு செய்தனர். 4-ம் நாளான நேற்று நேர்க்கோட்டுப்பாதையில் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லாபுரம் பீட் பகுதியில் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட வன அதிகாரி திலீப் ஆய்வு செய்தார். அப்போது அவர் நேர்க்கோட்டு பாதையில் நடந்து சென்று வனப்பகுதியில் பதிவாகி இருந்த சிறுத்தையின் காலடித்தடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம், அமராவதி வனச்சரக அலுவலர் முருகேசன், வனக்காப்பாளர் செல்வராஜ் உடனிருந்தனர்.

இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நேர்க்கோட்டு பாதையில் தென்படும் பறவையினங்கள், வனவிலங்குகள் நடமாட்டம், யானை லத்தி, காட்டெருமை சாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரி மந்தி, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் சாணங்கள் குறித்தும், நாளை மறுநாள் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதன் பின்னர் வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.