கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகளை தூவும் பள்ளி மாணவி - கரூரில் பயணத்தை தொடங்கினார்


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகளை தூவும் பள்ளி மாணவி - கரூரில் பயணத்தை தொடங்கினார்
x
தினத்தந்தி 15 Jun 2019 3:45 AM IST (Updated: 15 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகளை தூவும் பயணத்தை பள்ளி மாணவி கரூரில் தொடங்கினார்.

கரூர், 

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் ராமஸ்வேரப்பட்டியை சேர்ந்த ரவீந்திரன்-சங்கீதா தம்பதியரின் மகள் ரக்‌ஷனா (வயது 12). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், மரக்கன்றுகளை இலவசமாக வழங்குதல், முதலுதவி சிகிச்சை அளித்தல், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கடந்த 5 வருடமாக செய்து வருகிறார்.

மேலும் கல்வியை நிறுத்திய நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனது சொந்த செலவில், கல்வி உதவித்தொகை வழங்கி மீண்டும் அவர்கள் தொடர்ந்து படிக்க உதவிகள் செய்து வருகிறார். மாணவி ரக்‌ஷனாவின் சமூக சேவையை பாராட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் வழங்கினார். மேலும் பல்வேறு அமைப்பினரும் அவரை பாராட்டினர்.

இந்தநிலையில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும், உலக அமைதிக்காகவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து, சாலையோரங்கள் மற்றும் காலியாக கிடக்கும் நிலங்கள் ஆகியவற்றில் 4 லட்சம் விதைப்பந்துகளை தூவ உள்ளார். ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கு இடையே 50 விதைப்பந்துகளை தூவுகிறார். வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரங்களுக்கான விதைப்பந்துகள் தூவப்பட்ட உள்ளது. இந்த பயணத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, வெப்பமயமாதலை தடுத்தல், பெண்கல்வி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை தடுத்தல், இயற்கை விவசாயம் ஆகியவவை குறித்து விழிப்புணர்வு செய்கிறார்.

இந்த பயணத்தின் தொடக்க விழா நேற்று காலை கரூரில் ரக்‌ஷானா படித்து வரும் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் கரூர் மாவட்ட வன அதிகாரி நடராஜன் கலந்து கொண்டு கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து மாணவ-மாணவிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

ஒருமாதம் பயணம் மேற்கொண்டு அவர்கள் நாடு முழுவதும் விதைப்பத்துகளை தூவ உள்ளனர். முதல்-அமைச்சர் கொடுத்த பரிசு தொகை ரூ.1 லட்சம் மற்றும் தான் சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் மாணவர்கள் வழங்கிய பணம் ஆகியவற்றின் மூலம் ரக்‌ஷனா விதைப்பந்துகளை வாங்கி நாடு முழுவதும் தூவ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி ரக்‌ஷானாவுடன் 10 மாணவர்களும் உடன் சென்றுள்ளனர். விதைப்பந்துகளை லாரியில் எடுத்து சென்றனர்.

Next Story