மாவட்ட செய்திகள்

கற்பழிப்பு புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் - போலீஸ் நிலையம் முன்பு ஆசிரியை சுட்டுக்கொலை + "||" + The complaint of rape had pushed the rage in prison - Before the police station Teacher shot dead

கற்பழிப்பு புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் - போலீஸ் நிலையம் முன்பு ஆசிரியை சுட்டுக்கொலை

கற்பழிப்பு புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் - போலீஸ் நிலையம் முன்பு ஆசிரியை சுட்டுக்கொலை
போலீஸ் நிலையம் முன்பு பள்ளி ஆசிரியையை சுட்டுக்கொன்ற தொழில்அதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடகு,

பொன்னம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பள்ளி ஆசிரியையை சுட்டுக்கொன்ற தொழில்அதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் மீது கற்பழிப்பு புகார் அளித்து சிறையில் தள்ளியதால் ஜாமீனில் வந்து ஆசிரியையை அவர் தீர்த்துக்கட்டியுள்ளார்.


இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலலே கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா காவிரியம்மா (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி வாகனத்திலேயே வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆஷா வேலைக்கு செல்வதற்காக பொன்னம்பேட்டை புறக்காவல் நிலையம் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்று கொண்டிருந்தார். அவருடன் சில மாணவர்களும், பயணிகளும் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் ஆஷாவை நோக்கி 5 தடவை சுட்டார். இதில் குண்டுகள் துளைத்ததில் ரத்த வெள்ளத்தில் ஆஷா துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் மாணவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள காபி தோட்டத்தில் தஞ்சமடைந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு பொன்னம்பேட்டை போலீசாரும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விராஜ்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க போலீசார் காபி தோட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல், ஆசிரியை ஆஷாவின் உடல் ஆகியவற்றை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை ஆஷாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர், விராஜ்பேட்டை அருகே உள்ள பொன்னம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ் (60) என்பதும், காபி தோட்ட விவசாயி என்பதும், வட்டி தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீசிடம் ஆசிரியை ஆஷா கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் சரியாக செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் பணத் தகராறு இருந்து வந்தது. அத்துடன் தனது மனைவி இறந்துவிட்டதால், விதவையான ஆஷாவை திருமணம் செய்ய ஜெகதீஷ் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் ஆஷாவுக்கு ஜெகதீஷ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் ஆஷா, ஜெகதீஷ் மீது கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஜெகதீசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெகதீஷ் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகியிருந்தார்.

தன் மீது போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளியதால் ஆசிரியை ஆஷாவை கொல்ல ஜெகதீஷ் திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று காலை ஆஷா வழக்கமாக பள்ளிக்கு செல்ல பஸ்சுக்காக காத்தி நிற்கும் பொன்னம்பேட்டை புறக்காவல் நிலையம் பகுதிக்கு ஜெகதீஷ் சென்று காத்திருந்தார். ஆஷா அங்கு வந்ததும் அவரை ஜெகதீஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொன்னம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையான ஆஷாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.