பள்ளிப்பட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி நிறைவு; நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
பள்ளிப்பட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ஜமாபந்தி நிறைவு அடைந்ததையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் கடந்த 7–ந் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, மின்னணு ரேஷன்கார்டுகள், பட்டாமாற்றம், வாரிசு சான்றிதழ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 1,487 மனுக்கள் பெறப்பட்டன.
நேற்று நடந்த ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அதிகாரி செல்வம் தலைமை தாங்கினார். பள்ளிப்பட்டு தாசில்தார் மீனா முன்னிலை வகித்தார். திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 149 பேருக்கு மின்னணு ரேஷன்கார்டுகள், 55 பேருக்கு பட்டா மாற்றம், 171 பேருக்கு சிறு, குறு விவசாயிகள் சான்று 7 பேருக்கு வாரிசு சான்று என மொத்தம் 402 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தனி தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் அற்புதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் நடந்த ஜாமபந்தியில் மொத்தம் 2 ஆயிரத்து 200 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 214 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. காஞ்சீபுரம் துணை கலெக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் காஞ்சனமாலா, துணை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ..பழனி கலந்துகொண்டு 214 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் மண்டல துணை தாசில்தார்கள் பூபாலன், வெங்கடேசன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.