பெரியபாளையம் அருகே மின்கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பெரியபாளையம் அருகே மின்கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டில் இருந்து தேர்வாய் சிப்காட் தொழிற்சாலை பகுதிக்கு மின்பாதை அமைக்க மின்வாரிய கோபுரங்கள் அமைக்கும் பணி முடிவுற்றது. இந்த மின் கோபுரத்தில் மின் வயர்கள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பெரியபாளையம் அருகே அக்கரபாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள மின்கோபுரத்தில் மின்சார வயர் அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், புது கும்மிடிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் (வயது 50) மின்கோபுரத்தில் ஏறி மின்வயர்களை இணைக்கும் போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அவருடன் பணியாற்றியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். பலியான சிவபிரகாசத்துக்கு சர்மிளா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
இது குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.