தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் தண்ணீருக்காக மோட்டார் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கணவரை தாக்கியவரை தட்டிக் கேட்டதால் இளம்பெண்ணை கத்தியால் தாக்கப்பட்டார்.
தாம்பரம்,
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாஷினி (வயது 28). இவரது கணவர் மோகன். அதே குடியிருப்பில் வசிப்பவர் ஆதிமூலராமகிருஷ்ணன் (40). இவர் சட்டசபை சபாநாயகர் தனபாலின் அரசு கார் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு தண்ணீருக்காக மோகன் மோட்டார் போட்டுள்ளார்.
அப்போது மோட்டாரை ஏன் போட்டீர்கள் என்று கூறி மோகனை, ஆதிமூலராமகிருஷ்ணன் கண்டித்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் மோகனை, ஆதிமூலராமகிருஷ்ணன் தாக்கி எட்டி உதைத்துள்ளார்.
தனது கணவர் தாக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த சுபாஷினி இதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஆதிமூலராமகிருஷ்ணன் சுபாஷினியையும் தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியால் அவரது முகம், வாய்த்தாடையில் வெட்டினார்.
இதில் காயம் அடைந்த சுபாஷினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக சுபாஷினி சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிமூலராமகிருஷ்ணனை கைது செய்தனர்.