நாயர் ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது
நாயர் ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாளே ஆனபச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை தகிசர் குரவ் தெருவை சேர்ந்தவர் ஷீத்தல் சால்வி (வயது34). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய், சேய் இருவரும் ஆஸ்பத்திரியில் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில், 5-வது நாளான நேற்று முன்தினம் அதிகாலை அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதைப்பார்த்து ஷீத்தல் சால்வி அதிர்ச்சி அடைந்தார்.
பதறிப்போன அவர் டாக்டர், நர்ஸ் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தார். அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்வையிட்டனர். அப்போது, ஷீத்தல் சால்வியின் குழந்தையை ஊதா நிற குர்தா அணிந்த பெண் ஒருவர் வார்டுக்குள் நுழைந்து தனது கைப்பைக்குள் தூக்கி வைத்து கடத்தி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அக்ரிபாடா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், குழந்தையை கடத்தி சென்ற பெண் வி.என்.தேசாய் ஆஸ்பத்திரிக்கு குழந்தையுடன் சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் விசாரித்ததற்கு தனக்கு வீட்டில் பிரசவம் ஆனதாக கூறி குழந்தையை பரிசோதனைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
ஆனால்குழந்தையின் கையில் நாயர் ஆஸ்பத்திரியில் பிறந்ததற்கான அடையாள அட்டை இருந்ததை கவனித்த டாக்டர்கள் உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த ஷீத்தல் சால்வியின் குழந்தையையும் மீட்டனர். விசாரணையில், குழந்தையை கடத்தி கைதான பெண் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த ஹேசல் டோனால்டு கோரியா (வயது37) என்பதும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு நாயர் ஆஸ்பத்திரியில் குழந்தையை திருடியதாக தெரிவித்தார்.
போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story