குடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்பு


குடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:30 PM GMT (Updated: 14 Jun 2019 9:54 PM GMT)

நாகர்கோவிலில் குடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டியபோது 100 அடி ஆழ பழங்கால கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 

நாகர்கோவில் மாநகராட்சியில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதி முழுவதும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் நாகர்கோவில் கே.பி.ரோட்டில் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதிக்கும், பழைய பால்பண்ணை சந்திப்பு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பிரைட் தெரு உள்ளது.

இந்த தெருவில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக புதிய குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலையில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடந்தது. அப்போது பூமிக்கு அடியில் வித்தியாசமான சத்தம் கேட்டது.

இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் சந்தேகமடைந்து எந்திரம் மூலம் குழிதோண்டுவதை நிறுத்தினர். பின்னர் ஆட்கள் மூலம் குழி தோண்டினர். அப்போது சிமெண்டு சிலாப்புகளால் மூடப்பட்டிருந்த நிலையில் சுமார் 100 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்குள் புதைந்திருந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அந்த கிணறை சிலாப்புகளால் மூடிவிட்டு பணியை தொடர முயற்சி செய்தனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், கிணறு அமைந்துள்ள பகுதியின் மேற்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து நடைபெற இருப்பதால் கிணறை மண் நிரப்பி மூடியபிறகு பணிகளை செய்யவேண்டும் எனக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு சென்று மக்களை சமாதானப்படுத்தினர்.

இந்த தகவலை அறிந்த நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனும் அங்கு சென்று பூமிக்கு அடியில் புதைந்திருந்த கிணற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் பொதுமக்களின் கோரிக்கைப்படி கிணற்றை மண்ணால் நிரப்பிய பிறகு தான் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறி மாநகராட்சி என்ஜினீயரிடம் செல்போன் மூலம் பேசினார். அதிகாரிகளும் மண் போட்டு நிரப்பி வேலையை தொடர்ந்து செய்வதாக உறுதி அளித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் கூறும் போது, பிரைட் தெருவில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டியபோது 100 அடி ஆழம் கொண்ட பழங்கால கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிணற்றை சிலாப்புகளால் மூடி அதன்மேல் சாலை அமைத்துள்ளனர். இந்த கிணற்றை மண்போட்டு நிரப்ப அப்பகுதி மக்களும், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வும் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி பழைய கட்டிட இடிபாடுகளை கொண்டு கிணற்றை நிரப்ப கூறியிருக்கிறோம். மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கிடக்கும் கட்டிட இடிபாடுகளையும் லாரிகளில் அள்ளிச்சென்று கிணற்றுக்குள் கொட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Next Story