மாவட்டத்தில் திடீர் மழை, சூறைக்காற்றில் வாழைமரங்கள் முறிந்து விழுந்தன
மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது . இதில் நடுவீரப்பட்டு பகுதியில் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. தொடர்ந்து வெயில் அளவு சதத்தை கடந்தே வந்ததால், மாவட்டத்தில் வறண்ட வானிலையே நீடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், மதியத்திற்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது. இரவிலும் சாரல் மழையாக பெய்தது. இதனால் கடலூர் நகரில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வந்தது.
இதேபோல் நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, குமளங்குளம், கொடுக்கன்பாளையம் உள்பட பல பகுதிகளில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக, நடுவீரப்பட்டு, குமளங்குளம் கொடுக்கன்பாளையம் பகுதியில் விவசாயிகள் பயிர் செய்திருந்த வாழைமரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. இதில் சுமார் 10 ஏக்கரிலான வாழைகள் முறிந்து விழுந்து சேதமாகி இருக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இதற்கிடையே நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள 4 மின்மாற்றிகளில் இருந்த ‘இன்சுலேட்டர்’ வெடித்து சிதறியது. இதனால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. உதவி மின்வாரிய பொறியாளர் சங்கர் தலைமையிலான ஊழியர்கள் இவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 14 மி.மீ. மழை பெய்துள்ளது. இதர பகுதிகளில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
குப்பநத்தத்தில் 12.20., பண்ருட்டி 9 , குடிதாங்கி 7, பெலாந்துறை 6.20, வடக்குத்து 6, குறிஞ்சிப்பாடி 5, கடலூர் கலெக்டர் அலுவலகம் 3.90, கடலூர் 3.10, விருத்தாசலம் 2.20 மி.மீ.
Related Tags :
Next Story