2 பெண்கள் புகாரின்பேரில், 9 பேர் மீது வரதட்சணை வழக்கு


2 பெண்கள் புகாரின்பேரில், 9 பேர் மீது வரதட்சணை வழக்கு
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 15 Jun 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், 9 பேர் மீது வரதட்சணை கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை, 

நிலக்கோட்டை அருகே கே.குரும்பபட்டி சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவருடைய மனைவி முருகேஸ்வரி (39). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முருகேஸ்வரி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாண்டியனை அழைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா விசாரித்தார். அப்போது போலீஸ் நிலையத்திலேயே பாண்டியன், தனது மகன் அபினேசுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக முருகேஸ்வரி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி கணவர் பாண்டியன், உறவினர்களான பெரியசாமி, சுந்தரி, கக்கம்மாள் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் மனைவி பெருமாள் அக்காள் (29). இவர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- எனக்கு திருமணமாகி கடந்த 2013-ம் ஆண்டு விவாகரத்தானதால் தனியாக வசித்து வந்தேன். பின்னர் தேனி மாவட்டம் பெரியகுளம் பள்ளப்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் என்பவரை 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தற்போது எனது கணவர் ஆனஸ்ட்ராஜ், அவரது தாயார் முனியம்மாள் (60), தந்தை செல்வம் (75) மற்றும் உறவினர்கள் ராஜேஷ்பாண்டி (35), சித்ரா (30) ஆகிய 5 பேரும் சேர்ந்து என்னை தாக்கி, வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story