கூடலூர்- டி.ஆர். பஜார் இடையே புதிய பாலங்கள் கட்டும் பணி மும்முரம்
கூடலூர்- டி.ஆர்.பஜார் இடையே புதிய பாலங்கள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் முதல் டி.ஆர்.பஜார் வரை சிமெண்டு பாலங்கள் பழுதடைந்து இருந்தது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. எனவே பழுதடைந்த பாலங்களுக்கு பதிலாக புதியதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டி.ஆர்.பஜார், 27-வது மைல், சில்வர்கிளவுட், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பழைய பாலங்களின் அருகே சாலையை விரிவுபடுத்தி வாய்க்கால்கள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, ரூ.20 கோடி செலவில் புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு பழைய பாலங்களின் அருகே மண்ணை தோண்டி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் பாறைகள் உள்ளதால் அதை உடைக்கும் பணி நடக்கிறது. இருப்பினும் புதிய பாலங்கள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இன்னும் 3 மாதங்களில் பணிகள் நிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
இதனிடையே கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கி விட்டதால் கூடலூர்- நடுவட்டம் வரையிலான சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்டுமான பணியும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story