மின்விபத்துகளை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மின்வாரிய அதிகாரி தகவல்
பொதுமக்கள் மின்விபத்துகளை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
பொதுமக்கள் மின்விபத்துகளை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
மின்விபத்துகள்
தென்மேற்கு பருவ காற்று காலம் தற்போது தொடங்கி உள்ளதால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது. சில சமயங்களில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. காற்று மற்றும் மழை காரணமாக மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளது.
காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகே போவதோ அல்லது தொட முயற்சிப்பதோ கூடாது. இடி மின்னலின் போது கான்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடைய வேண்டும். மரங்களின் அடியில் தஞ்சமடைய வேண்டாம். மின்கம்பிகளுக்கு அருகே உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மின்விபத்து ஏற்பட்டு மரம் வெட்டும் நபருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தரமான ஒயர்
டி.வி. ஆன்டெனா மற்றும் கேபிள் டி.வி. ஒயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் எடுத்து செல்லக்கூடாது. மின்கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே ஒயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை அமர்த்துவதோ, மின்கம்பிகளை பந்தல்களாக பயன்படுத்துவதோ கூடாது.
மின்நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க அனைத்து கட்டிடங்களிலும் மின்கசிவு தடுப்பான் கருவியை பயன்படுத்த வேண்டும். வீடுகளில் பிரிட்ஜ், கிரைண்டர், மின்மோட்டார்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவதோடு தரமான மின்சார ஒயர்களை பயன்படுத்த வேண்டும். வீடுகள், மின்கம்பங்கள், மின்மாற்றியில் ஏற்படும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம். மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸ்–அப் எண்ணுக்கு...
கனரக வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்திவிட்டு, அதில் பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ வேண்டாம். பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின்பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு விவரங்களை குறிப்பிட்டு 8903331912 என்ற வாட்ஸ்–அப் எண்ணிற்கு தகவல்களை அனுப்பி தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story