மாவட்டம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம் கலெக்டர் ராமன் பேச்சு


மாவட்டம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:45 AM IST (Updated: 15 Jun 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம் என்று காட்பாடியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் விழாவில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

காட்பாடி, 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள பாரதிதாசன் சாரணர்குழு, கஸ்தூரிபாய் சாரணர் குழு இணைந்து விதைப்பந்துகள் தயாரிக்கும் விழாவை நேற்று நடத்தின. விழாவுக்கு சாரணர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட ஆணையாளர் பரிமளாகுமார் தலைமை தாங்கினார். சாரணர் குழுத்தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் சவுந்திரராஜன், காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், தாசில்தார் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானது என கூறுகிறார்கள். மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக பூமி உள்ளது. பூமியில் உள்ள அசுத்த காற்றை சுத்தம் செய்வதற்காக இறைவனால் உருவாக்கப்பட்டது மரங்கள். மனிதன் தன் சுயநலத்திற்காகவும், தேவைகளுக்காகவும் மரங்களை அழித்து விடுகிறான். அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மனிதன் அழிப்பதற்கு மட்டுமல்லாமல், உருவாக்கவும் ஆற்றல் படைத்தவன். வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த திறன் கிடையாது.

மரங்கள் அதிகளவு அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்பட்டு மழையளவு குறைந்து வருகிறது. நாம் அதிகளவு மரங்களை நட்டு பூமியை பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கும் இதேபோன்று பூமியை விட்டு செல்ல வேண்டும். அதனை சீரழித்து விட்டு செல்வது நல்லதல்ல.

வேலூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகள் அல்லது மரங்கள் வளர்க்க சாதகமான இடத்தில் 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகள் வளர்ப்பதும், மழைநீர் சேகரிப்பதும் மிகவும் அவசியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story