ரூ.10 கோடியில் செஞ்சி கோட்டை சீரமைப்பு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தகவல்


ரூ.10 கோடியில் செஞ்சி கோட்டை சீரமைப்பு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2019 4:30 AM IST (Updated: 15 Jun 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

ரூ.10 கோடி செலவில் செஞ்சி கோட்டையை சீரமைக்கும் பணி இந்த ஆண்டு தொடங்க இருக்கிறது என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள பழைய கலெக்டர் பங்களாவில் மாவட்ட அளவிலான அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து பழைய கலெக்டர் பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டனர். இதுகுறித்து வேலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனிடம், அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலையில் புதிதாக மாவட்ட அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் தமிழக அரசின் 38-வது அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தேனியிலும், திருவண்ணாமலையிலும் மாவட்ட அளவிலான அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. எல்லா அருங்காட்சியகங்களிலும் 7 விதமான வரலாறுகள் காட்சிப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அகழாய்வு இடங்கள் மற்றும் புராதான சின்னங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செஞ்சி கோட்டையை மத்திய அரசு மூலம் ரூ.10 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்க இருக்கிறது. மாவட்ட அருங்காட்சியகங்களை வலுப்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட அரும்பொருட்கள் அங்கேயே கொண்டு சென்று சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

வருகிற மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வருடம் கீழடி, ஆதிச்சநல்லூர், கொர்க்கை, அழகன்குளம் ஆகிய 4 இடங்களில் அகழ் வைப்பகம் அமைக்கப்பட உள்ளது. கீழடி அகழாய்வு 5-வது கட்டமாக தொடங்கப்பட்டு உள்ளது.

மண்டல அளவில் உள்ள அருங்காட்சியகங்கள் உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான பணி இன்னும் 2 வாரத்தில் தொடங்க உள்ளது. மேலும் ரூ.136 கோடிக்கு திட்டம் தீட்டி எதிரொலி அருங்காட்சியகத்தை உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பட்டறை பெரும்புதூர், ஈரோடு கொடுமணல், கீழடி என ஒரே நேரத்தில் 3 இடங்களில் அகழாய்வு நடைபெறுவது தமிழகம் மட்டும் அல்ல எந்த ஒரு மாநிலத்திற்கும் இது புதுமையான விஷயமாகும். இந்த வருடம் தொல்லியல் துறைக்கு ஒரு பொற்காலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story