குத்தாலத்தில் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை மனைவியின் தம்பி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை


குத்தாலத்தில் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை மனைவியின் தம்பி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Jun 2019 10:30 PM GMT (Updated: 15 Jun 2019 6:32 PM GMT)

குத்தாலத்தில், கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர் பாக மனைவியின் தம்பி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குத்தாலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாப்பனம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி(வயது 33). கூலித்தொழிலாளியான இவரும், நாகை மாவட்டம் குத்தாலம் அருணகிரிநாதர் தெருவில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் மாரிமுத்து என்பவரும் உறவினர்கள் ஆவர். முரளி, தனது சிறுவயதில் இருந்தே மாரிமுத்துவின் இரும்பு கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

மாரிமுத்துவுக்கு 2 மனைவிகள். இதில் 2-வது மனைவியின் மகளான திவ்யாவை முரளிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து திருமணம் செய்து வைத்தார். தற்போது திவ்யாவுக்கு 6 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் திவ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு முரளியை விட்டு விட்டு முரளியின் அத்தை மகன் சுரேஷ் என்பவருடன் சென்னைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவை மீட்டு மீண்டும் முரளியுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். இதையடுத்து கடந்த 6 மாத காலமாக முரளியும், திவ்யாவும் நீடாமங்கலத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் முரளி, தினமும் மது குடித்துவிட்டு திவ்யாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு திவ்யா குத்தாலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து திவ்யா தனது குடும்பத்தினரிடம் கூறி அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முரளி, தனது மனைவியை பார்க்க குத்தாலம் வந்தார். அப்போது முரளியை, திவ்யாவின் தம்பி செல்வகணபதி மதுகுடிக்க அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் முரளி வீடு திரும்பவில்லை. நேற்று காலை குத்தாலம் உமையாள்புரம் பைரவா நகரில் உள்ள ஒரு திடலில் தலை, வயிறு, இடுப்பு உள்பட 5 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் முரளி இறந்து கிடந்தார். அவரின் உடல் அருகில் உடைந்த பீர்பாட்டில்கள் கிடந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் (37) என்பவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் முரளியை யாரோ கொலை செய்து விட்டு சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து முரளியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளியை கொலை செய்தது யார்? அவரது கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திவ்யாவின் தம்பி செல்வகணபதியை தேடி வந்தனர். அவர், பந்தநல்லூரில் உள்ள அவரது நண்பர் கமலஹாசன் என்பவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று செல்வகணபதி, கமலஹாசன் ஆகிய 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story