ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் பெற்றோருக்கு வலைவீச்சு


ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் பெற்றோருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை கடத்தி சென்ற அவருடைய பெற்றோர் உள்ளிட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளத்தேவன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது20). இவர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து சீனிவாசன் தனது மகளை காணவில்லை என்று திருவோணம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யாவை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஐஸ்வர்யா, அதே ஊரை சேர்ந்த தங்கராசு மகன் கிருஷ்ணமூர்த்தி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஐஸ்வர்யா தனது கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் திருப்பூருக்கு சென்று வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது சொந்த ஊராகிய வெள்ளத்தேவன்விடுதிக்கு வந்த ஐஸ்வர்யா, தனது கணவர் வீட்டில் தங்கி இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற ஐஸ்வர்யாவின் தந்தை சீனிவாசன், தாயார் கனகவள்ளி உள்ளிட்ட சிலர் ஐஸ்வர்யாவை தாக்கி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க முயன்ற ஐஸ்வர்யாவின் மாமியார் விஜயராணி (45) தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த விஜயராணி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விஜயராணி அளித்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் உள்ளிட்டோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story