புதிய டெண்டரில் 600 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை
புதிய டெண்டரில் 600 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால், அவற்றின் உரிமையாளர்கள் நாமக்கல்லில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 6 ஆயிரம் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன.
இவை மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான டெண்டர் ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் பழைய டெண்டர் ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தை எதிர்கொள்ள சங்கம் சார்பில் டெண்டர்குழு அமைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 600-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்க உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு, நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சங்கத்தின் துணை தலைவர் தங்கவேல், பொருளாளர் கணபதி ஆகியோர் சமரசம் செய்தனர். இருப்பினும் அவர்கள் உடனடியாக சங்க அலுவலகத்திற்கு தலைவர் மற்றும் செயலாளர் வர வேண்டும், அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர்.
மேலும் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க தற்போது இயங்கி கொண்டு இருக்கும் வாகனங்களை நிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே சங்கத்தின் சார்பில் வருகிற 20-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்று தருவது குறித்து விவாதிக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story