ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2019 4:30 AM IST (Updated: 16 Jun 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 4, 5-ம் வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அந்தந்த பகுதியில் 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் அருகே 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 5-வது வார்டில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்ததால் 4-வது வார்டில் இருந்து குழாய் மூலம் 5-வது வார்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு தெற்குத்தெரு, கீழத்தெரு உள்ளிட்ட அனைத்து தெரு பொதுமக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரே நேரத்தில் 2 வார்டு பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கீழத்தெரு பொதுமக்கள் நேற்று ஒன்றுதிரண்டு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சின்னவளையம் கிராமத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவலறிந்த நகராட்சி ஊழியர் பாண்டியன் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடே‌‌ஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், தற்காலிகமாக நகராட்சி குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும்.

மேலும் விரைவில் பழுதடைந்த மின் மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story