சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே மிளகாய்பொடி, கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது


சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே மிளகாய்பொடி, கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2019 4:30 AM IST (Updated: 16 Jun 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபடுவதற்காக மிளகாய்பொடி மற்றும் கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட வழிப்பறி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் இரவு அரியாங்குப்பம் போலீஸ் நிலைய எல்லைப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே போலீசார் ரோந்து சென்றபோது அங்குள்ள ஒரு மதுக்கடையையொட்டி இருளில் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதை பார்த்தனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதனால் உஷாரான போலீசார் அவர்களை விரட்டி மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையின்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் முன்னுக்குப் முன் முரணான தகவல்களை கூறினர். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அவர்கள் சட்டைப் பாக்கெட்டுகளில் மிளகாய்பொடி மற்றும் கத்தி ஆகியவற்றை வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் அந்த கும்பலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அரியாங்குப்பம் சண்முகம் நகர் புருஷோத்தமன் வீதியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 27), கோவிந்தசாலை குபேர் நகரை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆட்டோ மணி (23), நெல்லித்தோப்பு ஒத்தவாடை வீதியைச் சேர்ந்த அசோக் (23), உருளையன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த சதீஷ் (30), நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த நித்யகுமார் என்ற ஜோசப் (35) ஆகியோர் என்பதும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் கத்தி மற்றும் மிளகாய்பொடியுடன் பதுங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 கத்தி, மிளகாய் பொடி பாக்கெட்டுகள் 4, செல்போன்கள் 4, மோட்டார் சைக்கிள்கள் 3 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் யாரையாவது கொலை செய்யும் திட்டத்துடன் பதுங்கி இருந்தார்களா? அல்லது வழிப்பறி செய்வதற்காக பதுங்கி இருந்தார்களா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் 5 பேரும் பதுங்கி இருந்த இடத்துக்கு அருகே படகு குழாம் அமைந்துள்ளது. அங்கு வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இந்த நிலையில் ஆயுதங்களுடன் 5 பேர் கும்பல் அங்கு பதுங்கி இருப்பது அந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story