முதுமலையில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு


முதுமலையில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

மசினகுடி,

ஊட்டியில் இருந்து கூடலூர், முதுமலை வழியாக மைசூரு நோக்கி நேற்று காலை 11 மணிக்கு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை ஹேமந்த்குமார் என்பவர் ஓட்டினார். பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். முதுமலை புலிகள் காப்பக சாலையில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். பஸ்சில் இருந்த யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த விபத்து குறித்து உடனடியாக மசினகுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மசினகுடி போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 வாலிபர்களையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் அருகே தெர்க்நாமி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் 12 மாணவர்கள் 6 மோட்டார் சைக்கிள்களில் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். தமிழக- கர்நாடகா எல்லையான கக்கநல்லாவை கடந்து முதுமலை புலிகள் காப்பக சாலையில் ஜாலியாக அரட்டை அடித்தவாறு மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்துள்ளனர். இதில் குண்டல்பேட் தெர்க்நாமி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் கோகுல்(வயது 21), சிவலிங்கையா மகன் சோமு(21) ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். கோகுல் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். அப்போது எதிரே வந்த கர்நாடகா அரசு பஸ் மீது அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story