பழங்குடியின மக்கள் கல்வி கற்றால் சட்டம், உரிமைகளை அறிந்து கொள்ளலாம் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


பழங்குடியின மக்கள் கல்வி கற்றால் சட்டம், உரிமைகளை அறிந்து கொள்ளலாம் - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:30 AM IST (Updated: 16 Jun 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின மக்கள் கல்வி கற்றால் சட்டம், உரிமைகளை அறிந்து கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வினீத் கோத்தாரி பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. முகாமுக்கு தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான வினீத் கோத்தாரி தலைமை தாங்கி பேசியதாவது:-

நான் வறட்சி மாநிலமான ராஜஸ்தானில் இருந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாகி உள்ளேன். தமிழ்நாடு மாநிலம் கலாசாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது. பெண்களை முக்கியத்துவமாக கருதுகின்றனர். குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார்கள். பழங்குடியின மக்கள் இடையே ஒற்றுமை அதிகமாக இருப்பதை காண முடிகிறது. பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமானால் கல்வி அவசியம். கல்வி அறிவால் சட்டம் மற்றும் உரிமைகளை அறிந்து கொள்ள முடியும். பழங்குடியினருக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் செயல்படுத்தி வருகிறது. அரசு அதிகாரிகள் மக்கள் மத்தியில் இடைவெளி இல்லாமல் செயல்படுகின்றனர். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து நீதி கிடைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மக்கள் நீதிமன்றம் மற்றும் சமரச மையம் மூலம் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகிறது.

நீலகிரி மிகவும் அழகான மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் இயற்கை எழிலையும், சுற்றுச்சூழலையும் வனப்பகுதியை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் பாதுகாக்க வேண்டும். மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல் போன்றவற்றை நாம் செயல்படுத்த வேண்டும். நீதிமன்றத்துக்கும், அரசு துறைக்கும் வித்தியாசம் உள்ளது. நீதிமன்றத்தில் முறையாக வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பொதுமக்கள் மனுக்களை சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பி தீர்வு காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீ‌‌ஷ்குமார் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும். சுற்றுச்சூழலை கெடுக்கக்கூடிய நபர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றார். முன்னதாக தமிழகம் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதையடுத்து தோடர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. முடிவில் தோடர் மற்றும் கோத்தர் இன மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை நீதிபதி வினீத் கோத்தாரியிடம் அளித்தனர். முகாமில் நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை வரவேற்றார். இதில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜசேகர், நீலகிரி மாவட்ட மகளிர் நீதிபதி முரளிதரன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுரே‌‌ஷ்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் பிரகா‌‌ஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story