மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி - வீடு, கடைகளில் கருப்பு கொடி கட்டி பா.ஜ.க.வினர் போராட்டம்


மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி - வீடு, கடைகளில் கருப்பு கொடி கட்டி பா.ஜ.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வீடு, கடைகளில் கருப்பு கொடி கட்டி பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் 3 ரெயில்வே கேட்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. எனவே இந்த வழியாக ரெயில்கள் செல்லும் போது வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து அதற்கான பணிகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் தற்போது வரை பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடையவில்லை.

அதேநேரத்தில் ரெயில்வே தண்டாள பகுதியில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து அறிந்த பா.ஜ.க. மாவட்ட வணிக பிரிவு துணை தலைவர் கார்த்திக் வினோத் தலைமையிலான பா.ஜ.க.வினர் நேற்று பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வீடு, கடைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜானகிராமன், மாவட்ட செயலாளர் தனபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறுகையில், ரெயில்வே மேம்பால பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நிறைவு செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் மேம்பால பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை இன்னும் வரவில்லை. அதனால் பணிகளை முடிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இது ஏற்புடையதல்ல. எனவே பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதமாகவும், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் வீடு, கடைகளில் கருப்பு கொடிகளை கட்டியுள்ளோம். அத்துடன் கோரிக்கைகளை வலியுறுத்தி சுவரொட்டிகளையும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ஒட்டியுள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Next Story