மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்து வருகிறது - கலெக்டர் அறிக்கை


மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்து வருகிறது - கலெக்டர் அறிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2019 10:30 PM GMT (Updated: 15 Jun 2019 8:05 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் அதிகரித்து வருவதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர்,

இந்திய அரசின் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் இந்திய அளவில் ஆண், பெண் விகிதம் மிக குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந்தேதி தொடங்கப்பட்டது. அந்த 100 மாவட்டங்களில் ஒன்றாக தமிழ்நாட்டில் ஆண், பெண் விகிதம் மிக குறைவாக இருந்த கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பெண் குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பாலின பாகுபாட்டை குறைத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் சமுதாய பங்கேற்பினை உறுதி செய்தல், கருவில் இருக்கும் சிசுவின் பாலின தேர்வை தடை செய்தல், அதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போது பெண் குழந்தைகளின் பாலின விகிதம் கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. அதோடு பெண் குழந்தைகள் பிறப்பினை கொண்டாடும் விதமாக 2015-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் 7-ந் தேதி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தை மற்றும் குழந்தையின் தாயாரை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்றுகள் மற்றும் அம்மா பரிசு பெட்டகம் ஆகியவை வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மே மாதம் வரையில் 51 ஆயிரத்து 153 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 23 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் கூறி உள்ளார்.

Next Story