குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுக்குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானதால் கடந்த சில வாரங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மணவாளநல்லூர், முகுந்த நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்கும் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக அவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
இதையடுத்து பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே நேற்று காலை கிராம மக்கள் காலி குடங்களுடன் அருகில் உள்ள பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்கும் அலைந்து திரிந்தனர். ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தால் தான் மறியலை கைவிட்டு, இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தியதுடன், ஆழ்துளை கிணற்றில் புதிய மோட்டார் அமைத்து, விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அப்போது கிராம மக்கள் விரைவில் எங்களுக்கு குடிநீர் வழங்காவிட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story