வானூர் அருகே, 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


வானூர் அருகே, 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.

வானூர்,

வானூர் தாலுகா விநாயகபுரம் கிராமத்தில் பெரியாண்டவர், வாழுமுனீஸ்வரர் மற்றும் அய்யனார் கோவில்கள் தனித்தனியே அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு பூசாரிகள் சென்றுவிட்டனர்.

மீண்டும் நேற்று காலை வந்து பார்த்த போது கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல்களில் திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதிலும் பெரியாண்டவர் கோவிலின் உண்டியலை உடைக்க முடியாததால், அப்படியே பெயர்த்து எடுத்து பக்கத்தில் உள்ள முந்திரி தோப்புக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு மர்ம ஆசாமிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் பிரிஸ்டி வரவழைக்கப்பட்டது. அது பெரியாண்டவர் கோவிலில் இருந்து அருகில் உள்ள முந்திரி தோப்புக்கு சென்று அங்கேயே நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த சம்பவத்தில் 3 கோவில்களிலும் இருந்த 3 உண்டியல்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருக்கலாம் என கோவில்களின் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே நாள் இரவில் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story