நிலத்தடிநீர் திருட்டை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


நிலத்தடிநீர் திருட்டை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2019 10:45 PM GMT (Updated: 15 Jun 2019 8:07 PM GMT)

மாதவரத்தில் நிலத்தடிநீர் திருட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை மற்றும் மாத்தூர், மஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 40–க்கும் மேற்பட்ட பகுதிகளில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை திருடி தண்ணீர் லாரிகள் மூலம் சென்னை கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாதவரம் பால்பண்ணை, மாத்தூர், மஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் மணலி காமராஜர் சாலையில் மாத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு புறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து நிலத்தடி நீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தனர்.

இதனையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story