விளக்கு தீ உடலில் பிடித்து 6 வயது சிறுமி கருகி சாவு
திருவள்ளூர் அருகே விளக்கு தீ உடையில் பற்றி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் நியூடவுனை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா (36). மகள் ரித்திகா (6). இவள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரித்திகா தன் வீட்டின் வெளியே அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டு வாசலில் ஏற்றி வைத்திருந்த அகல் விளக்கு தீ எதிர்பாராதவிதமாக சிறுமியின் உடையில் பிடித்து எரிந்தது.
இதில் உடல் கருகிய சிறுமியை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிறுமி ரித்திகா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.