மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்து வருகிறது. இதனிடையே அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மாலையில் அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை, சூரமங்கலம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையினால் வாகன ஓட்டிகள் பலர் நனைந்து கொண்டே சென்றனர். சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் தெருக்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியது. மழையின் போது சூறைக்காற்று வீசியதால் அஸ்தம்பட்டி காந்தி ரோடு பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. மேலும் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் சில இடங்களில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.
மழையின் காரணமாக திருவாக்கவுண்டனூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக பாலத்தின் கீழ் பகுதியில் நின்றதாலும், ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயன்றதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நின்றன. இதேபோல் 4 ரோடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவில் மழை லேசாக தூறிக்கொண்டே இருந்தது.
பனமரத்துப்பட்டி, மல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் மேகமூட்டங்கள் திரண்டு வந்தன. பின்னர் மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 8 மணி வரை மழை விட்டு விட்டு பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பலர் ஆங்காங்கே மழைக்காக ஒதுங்கி நின்றனர். ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். சூறாவளி காற்று இல்லாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story