புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலைக்கு 2 மாதத்திற்குள் மறு தேர்தல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு


புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலைக்கு 2 மாதத்திற்குள் மறு தேர்தல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலைக்கு 2 மாதத்திற்குள் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியில் உள்ள புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் இயக்குனர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் தலைமையிலானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலைக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீண்டும் கூட்டுறவு பண்டகசாலைக்குள் செல்ல முயன்றனர்.

போலீசார் தடியடி

அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதைத்தொடர்ந்து ஒருவரை ஒருவர் உப்பு மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள், கற்கள், நாற்காலிகள் போன்றவற்றை வீசி தாக்கிக்கொண்டனர். இதற்கிடையே தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் வந்த தி.மு.க.வினருக்கும், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து தி.மு.க.வினரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் கற்கள், நாற்காலி உள்ளிட்டவற்றை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கு திரண்டு நின்றவர்களை கலைத்தனர்.

மறு தேர்தல் நடத்த உத்தரவு

இதைத்தொடர்ந்து தி.மு.க. நிர்வாகி சுப.சரவணன் புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலை வேட்புமனு தாக்கலை ரத்து செய்து விட்டு, மீண்டும் மறுதேர்தல் நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது மதுரை ஐகோர்ட்டு கிளையின் சார்பில் திருச்சியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு தேர்தல் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசூர்யா விசாரணை நடத்தினார்.

அப்போது தி.மு.க. தரப்பில் மாவட்ட பொறுப்பாளரும், வக்கீலுமான செல்லப்பாண்டியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலைக்கு 2 மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும். மேலும் வேட்பு மனு தாக்கல் முதல் வாக்குப்பதிவு வரை உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், என்று உத்தரவிட்டார்.

Next Story