மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தால் மட்டுமே பலன் உண்டு முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பேச்சு


மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தால் மட்டுமே பலன் உண்டு முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 3:30 AM IST (Updated: 16 Jun 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் கல்வியில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தால் மட்டுமே கல்விக்கு செலவழிப்பதற்கான பலன் கிடைக்கும் என முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.

செய்யாறு, 

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் சாப்பிடும் மாணவர்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட்டு வந்தனர். இதனை மாற்றிடும் வகையில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், தனியார் கம்பெனி நிறுவனருமான உமாபதி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உணவுக் கூடம் கட்ட ஏற்பாடு செய்தார். கட்டுமான பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பி.நடராஜன் (பொறுப்பு), செயலாளர் பொன்னுசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.கே.மெய்யப்பன், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் வரவேற்றார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கலந்து கொண்டு உணவுக் கூடத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தரையில் அமர்ந்து சாப்பிடும் மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் செலவில் இப்பள்ளியில் பயின்ற தந்தையின் நினைவாக முன்னாள் மாணவர் உமாபதி உணவுக் கூடம் அமைத்து கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இப்பள்ளிகாக செலவிடும் தொகை மாணவர்களாகிய உங்களுக்காக செய்வதாகும். அத்தகைய செலவு பயனுள்ளதாக அமைய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆண்டிற்கு கல்விக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது, செலவிற்கான வருவாயாக எதிர்பார்ப்பது மாணவர்கள் கல்வி கற்பதில் தான் உள்ளது. மாணவர்கள் 100 சதவீதம் கல்வி பெற்று தேர்ச்சியடைந்தால் மட்டுமே பலன் உண்டு, இல்லையேல் அரசு செலவிடுவது வீணாகி போகும்.

அரசு செலவிடும் பணத்தை பயனுள்ளதாக மாற்றி பல மடங்கு பண மதிப்பிலான கல்வி அறிவை பெற்று, அடுத்த தலைமுறை கல்வி கற்க நீங்கள் உதவ வேண்டும். பள்ளி பருவத்தில் மாணவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து கல்வியை கற்றிட வேண்டும். உங்களை திசை திருப்பக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். மாவட்டத்தில் நாளை நடக்க வேண்டிய பாடத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாணவர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டில் படித்து சொந்தமான வினாக்களை தயார் செய்து வகுப்பில் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம்.

இத்தகைய செயல்பாட்டினால் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வரும் மாவட்டமாக நமது மாவட்டம் திகழ்கிறது. மாநில அளவில் 20-வது இடத்தில் உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களும் திரும்பிப் பார்க்கும் வகையில் வருங்காலத்தில் மாநில அளவில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலை திகழும்.

இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகி எம்.மணிவாசகம், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் தனசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பி.சங்கர் நன்றி கூறினார்.

Next Story