கோவை மாவட்டத்தில், ரூ.6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை,
சிறு, குறு விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்னும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் (ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகள்) வழங்கப்படும். இந்த நிதி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த நிதியை பெற சிறு,குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் தகுதி உடையவர்கள் ஆவர்.
கோவை மாவட்டத்தில் நடுத்தர மற்றும் பெரிய விவசாயி களின் குடும்பங்களை பயனாளிகளாக சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் தங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், பட்டா எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்க வேண்டும். பயனாளிகளை சேர்ப்பதற்கு 1.2.2019 பின்னர் நிலத்தின் உரிமையாளர் இறந்து, வாரிசு உரிமைப்படி நிலத்தின் உரிமை மாற்றப்பட்ட இனங்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அளிக்கப்படும். எனவே நிலத்தின் உரிமையாளர் இறந்திருந்தால் அவரின் வாரிசுகள் உடனடியாக பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஜமாபந்தியில் மனு அளித்தும் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா பெற்றவர்களும், குத்தகைதாரர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story