ஹொன்னாளி டவுனில் பயங்கரம்: காதல் விவகாரத்தில் மெக்கானிக் அரிவாளால் வெட்டிக்கொலை


ஹொன்னாளி டவுனில் பயங்கரம்: காதல் விவகாரத்தில் மெக்கானிக் அரிவாளால் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2019 2:15 AM IST (Updated: 16 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

காதல் விவகாரத்தில் மெக்கானிக்கின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தாவணகெரே,

ஹொன்னாளி டவுனில், காதல் விவகாரத்தில் மெக்கானிக்கின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாவணகெரே மாவட்டம் ஹொன்னாளி டவுன் துர்கிகுடி பகுதியைச் சேர்ந்தவர் தயானந்த் கான்(வயது 20). மெக்கானிக்கான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர்களுடய காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த பெண்ணும், தயானந்த் கானும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தயானந்த் கான் தனது காதலியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டின் அருகே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும், தயானந்த் கானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயானந்த் கான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தயானந்த் கான் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், தயானந்த் கானிடம் அவருடைய காதல் விவகாரம் குறித்து தனியாக பேச வேண்டும் என்று கூறி ஹொன்னாளி தாலுகாவிற்கு உட்பட்ட பட்டணசெட்டி அருகே உள்ள ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து அந்த மர்ம நபர்கள் தயானந்த் கானை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தயானந்த் கான் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற மர்ம நபர்கள் அவருடைய கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் தயானந்த் கான் அவதிப்பட்டார்.

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் தாங்கள் தயாராக கொண்டு வந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தயானந்த் கானை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி அறிந்த தயானந்த் கானின் குடும்பத்தினரும், அவருடைய மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அந்த சந்தர்ப்பத்தில் தயானந்த் கானை அவருடைய காதலியின் குடும்பத்தினரே கொலை செய்திருக்க கூடும் என்றும் தயானந்த் கானின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் புகாரும் அளித்தனர்.

புகாரின்பேரில் இதுபற்றி ஹொன்னாளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story