தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது


தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2019 11:30 PM GMT (Updated: 15 Jun 2019 9:31 PM GMT)

தோசை மாவு பிரச்சினையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதாநகர் கிராஸ் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமோகன் (வயது 58). பிரபல எழுத்தாளரான இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ் திரைப்படங்கள் பலவற்றுக்கு கதைவசனமும் எழுதி உள்ளார்.

இந்தநிலையில் ஜெயமோகன் நேற்று முன்தினம் மாலை பார்வதிபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் 2 தோசை மாவு பாக்கெட்டுகள் வாங்கியுள்ளார். பின்னர் அந்த மாவு பாக்கெட்டுகளை வீட்டுக்கு கொண்டு சென்று பிரித்து பார்த்தபோது தோசை மாவு கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அந்த தோசை மாவு பாக்கெட்டுகளை மீண்டும் தான் வாங்கிய மளிகைக்கடையில் கொண்டுபோய் கொடுத்துள்ளார். அப்போது கடையில் இருந்த மளிகை கடை உரிமையாளரான பார்வதிபுரத்தைச் சேர்ந்த செல்வன் (51) என்பவரின் மனைவி தோசை மாவு பாக்கெட்டுகளை திரும்ப வாங்க மறுத்ததாகவும், ஆனால் ஜெயமோகன் அந்த மாவு பாக்கெட்டுகளை அங்கேயே வைத்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வன், ஜெயமோகனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கையால் இடது கன்னத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஜெயமோகன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஜெயமோகன் கொடுத்த புகாரின்பேரில் நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை எழுத்தாளர் ஜெயமோகன் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தோசை மாவுக்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story