ஜவ்வாதுமலை கோடைவிழாவில் சாகச விளையாட்டுகள் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்தனர்
ஜவ்வாதுமலை கோடைவிழா நிறைவு நாளில் சாகச விளையாட்டுகள் நடந்தன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்தனர்.
திருவண்ணாமலை,
ஜமுனாமரத்தூரில் ஜவ்வாதுமலை கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் நாளில் மலைவாழ் மக்களில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 2-ம் நாளான நேற்று நிறைவு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனையொட்டி காலை முதலே திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாது வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஜவ்வாதுமலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த மக்களும் விழாவை காண அங்கு திரண்டனர். இதனால் ஜமுனாமரத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டிய நிகழ்ச்சி, நாய் கண்காட்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடம் பெற்று இருந்தன. மேலும் மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் ஆண்களுக்கு மினி மராத்தன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, குண்டு எறிதல் போட்டி, பெண்களுக்கு இசை நாற்காலி போட்டி போன்றவை நடைபெற்றது.இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்தனர்.
ஜமுனாமரத்தூர் ஏரியில் வாட்டர் பால், கமாண்டோ நெட், பர்மா பிரிட்ஜ், ரிவர் கிராசிங் போன்ற சாகச விளையாட்டுகள் நடந்தன. மேலும் மிதிவண்டி படகுப் போட்டி, வாத்து பிடிக்கும் போட்டி போன்றவையும் நடந்தது. ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், பொருட்களின் விற்பனை கடைகள் ஜவ்வாது மலை உள்ளூர் சந்தை கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் சுற்றுலா பயணிகள் பயன்பெற்றனர்.
மாலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சியில் எமலோகத்தில் சுற்றுச் சுழல் என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நகைச்சுவை நாடகமும் நடந்தது. அத்துடன் ஜவ்வாதுமலை கோடை விழா நிறைவடைந்தது.
Related Tags :
Next Story