ரெயில்பெட்டியை தூக்கிச்சென்ற கிரேன் மோதியதால் சுவர் இடிந்து விழுந்து ஐ.சி.எப். ஒப்பந்த ஊழியர் பலி


ரெயில்பெட்டியை தூக்கிச்சென்ற கிரேன் மோதியதால் சுவர் இடிந்து விழுந்து ஐ.சி.எப். ஒப்பந்த ஊழியர் பலி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:45 AM IST (Updated: 16 Jun 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.சி.எப்.பில் ரெயில்பெட்டியை தூக்கிச்சென்ற கிரேன் சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்ததால் ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திரு.வி.க. நகர்,

சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தவர் திருமூர்த்தி (வயது 32). கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த இவர், சென்னை வில்லிவாக்கத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வேலை முடிந்ததும் ஐ.சி.எப்.பில் உள்ள 5 அடி உயர சுவர் அருகே அமர்ந்து திருமூர்த்தி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது ரெயில் பெட்டியை தூக்கிச்சென்ற கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்து திருமூர்த்தி மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி நேற்று அதிகாலை திருமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஐ.சி.எப் போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த திருமூர்த்திக்கு கீதா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

Next Story