காஞ்சீபுரம் அருகே சுவரில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி; காரில் இருந்த ரூ.69¾ லட்சத்தை பத்திரமாக ஒப்படைத்த போலீசார்


காஞ்சீபுரம் அருகே சுவரில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி; காரில் இருந்த ரூ.69¾ லட்சத்தை பத்திரமாக ஒப்படைத்த போலீசார்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 5:47 PM GMT)

காஞ்சீபுரம் அருகே சுவரில் கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலியானார். விபத்தில் சிக்கிய காரில் இருந்த ரூ.69¾ லட்சத்தை பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர்.

காஞ்சீபுரம்,

சென்னையில் ஒரு தனியார் இரும்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியூரில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு இரும்புபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நிறுவனங்களில் இரும்பு பொருட்களை இறக்கி விட்டு வசூலான ரூ.69 லட்சத்து 73 ஆயிரத்துடன சென்னை நிறுவன மேலாளர்களான திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த மேல்பூண்டியை சேர்ந்த பாலாஜி (40), முரளி (30) ஆகியோர் கார் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். பாலாஜி, முரளி இருவரும் சகோதரர்கள். காரை சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சரவணன் (40) ஓட்டி வந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு எண்ணெய் நிறுவன சுவரில் இந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பிள்ளை, கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

காரை சோதனை செய்தபோது, அதில் ஒரு பையில் ரூ.69 லட்சத்து 73 ஆயிரம் இருந்தது தெரிந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் அதை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையில், இரும்பு பொருட்கள் விற்ற பணம் என்பது தெரிந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், உயிரிழந்த முரளியின் தந்தை சண்முகத்தை வரவழைத்து பத்திரமாக அந்த பணத்தை ஒப்படைத்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கும், போலீசாருக்கும் சண்முகம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

Related Tags :
Next Story