கடலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை


கடலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 17 Jun 2019 4:00 AM IST (Updated: 17 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள், வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையடித்துசென்ற சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்,

கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரவீன்குமார்(வயது27). இவர் ஆம்புலன்சு டிரைவராக இருக்கிறார். இவரது காதல் மனைவி திவ்யபாரதி(25). இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். இத் தம்பதியருக்கு அனுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமித்ராவின் முதலாவது பிறந்தநாள் விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பிரவீன்குமார் பணிக்கு செல்வதாக திவ்யபாரதியிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். அவர் வெளியே சென்ற பின் 2 பேர் திவ்யபாரதியின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

வீட்டில் குழந்தையுடன் தூங்கிக்கொண்டு இருந்த திவ்யபாரதியை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர், இதில் அவரது தாடை எலும்பும் பற்களும் உடைந்து உள்ளது. ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த திவ்யபாரதியின் தாலிசங்கிலி, வளையல்கள் மற்றும் கம்மல்கள் ஆகியவற்றை கழற்றி எடுத்தனர், பின்னர் மர்ம ஆசாமிகள், பீரோவை திறந்து நகைகளையும் கொள்ளையடித்துகொண்டு தப்பிச்சென்றனர்.

வழக்கமாக திவ்யபாரதி அருகில் உள்ள அவரது தாயார் அமுதாவின் வீட்டுக்கு காலையிலேயே செல்வது உண்டு. ஆனால் நேற்று காலையில் வெகுநேரமாகியும் மகள் வராததால் சந்தேகம் அடைந்த அமுதா மகள் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு திறந்து இருந்ததால், உள்ளே சென்றார்.

வீட்டுக்குள் திவ்யபாரதி ரத்தவெள்ளத்தில் தரையில் மயங்கிக்கிடந்தார், திவ்யபாரதியின் அருகில் குழந்தை அனுமித்ரா தூங்கிக்கொண்டு இருந்தது. குழந்தையின் கழுத்தில் துணி கட்டப்பட்டு இருந்தது. கழுத்தில் துணியை கட்டி குழந்தையை கொல்ல முயற்சி நடந்ததா? என்பது தெரியவில்லை.

இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுதா குழந்தையை தூக்கிக்கொண்டு அழுதுகொண்டே வெளியே ஓடி வந்தார்.

அவரது அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திவ்யபாரதியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த வீட்டுக்கு கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். திவ்யபாரதி சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரிக்கும் போலீசார் சென்று அவரது தாயார் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சுமார் 8½ பவுன் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர்களே இச்சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பாக புதுநகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவத்தில் போலீசாரின் சந்தேக பார்வை பிரவீன்குமார் மீது விழுந்துள்ளதால் அவரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள். நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் வில்வநகர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story