உப்பு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்


உப்பு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

உப்பு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. மாநாடு தூத்துக்குடியில் உள்ள ஒரு மகாலில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் சிவனாகரன் வரவேற்று பேசினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் கோபிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் ரசல் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சக்கரவர்த்தி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.

நேற்று 2-வது நாள் மாநாடு நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட இணை செயலாளர் அப்பாத்துரை ஆகியோர் பேசினர்.

மாநாட்டில், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரிய உப்பு தொழிலை பாதுகாக்க சிறு, குறு, நடுத்தர உப்பு உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் உப்புக்கு டன்னுக்கு ரூ.1000 ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உப்பு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

தூத்துக்குடியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் காசி நன்றி கூறினார்.

Next Story