எதிர்மறை கருத்துகளை கூறி அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடுகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


எதிர்மறை கருத்துகளை கூறி அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடுகிறார்கள் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர் எதிர்மறை கருத்துகளை கூறி ஆதாயம் தேடுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சஞ்சய்குமார் மற்றும் அதிகாரிகளை செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்து அவர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். அணுமின் நிலைய அதிகாரிகள், அணுஉலையின் செயல்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவுகள் கொட்டப்படுகிறது, புதைக்கப்படுகிறது என்றும், அதனால் அபாயகரமான கதிர்வீச்சு பரவுகிறது என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களில் இருந்தும் கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டப்போவதாகவும் கருத்துகள் பரவி வருகிறது என்பது மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த அச்சத்தை போக்குவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை.

எப்போதுமே அரசியலில் ஒரு பிரச்சினை வந்தால் நேர்மறையான கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும். எதிர்மறையான கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக எதிர்மறை கருத்துகளை கூறி உண்மைகளை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் எதிர் கருத்துகளை பதிவு செய்து அதற்கு போராட்டம் நடத்தி அதன்மூலம் அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடுவது அதிகரித்து வருகிறது. உண்மையை எடுத்து சொன்னால் அவர்கள் மீது கடுமையான விமர்சனம் எழுகிறது.

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக அணுமின் நிலைய அதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடத்தினோம். அப்போது கதிர்வீச்சு, சுனாமியால் பாதிப்பு உண்டா? கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டா? அணுக்கழிவால் பாதிப்பு உண்டா? என முழுமையாக விவாதிக்கப்பட்டது. இங்குள்ள அணுக்கழிவுகளை சேமிப்பதற்கு 2022-ம் ஆண்டு வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கழிவுகளை 7 வருடம் கழித்துதான் வெளியே கொண்டு வரவேண்டும்.

இப்போது அதற்கு கால அவகாசம் இருக்கிறது. வெளியில் கழிவுகளை சேமிப்பதற்கு ஒரு கிடங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு கால அவகாசம் கேட்டு அதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இது மக்களுக்கு பாதிப்பை கொடுக்காது என்பதனால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கும்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்த இருக்கிறார்கள். அணுக்கழிவு தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரின் கடமையாகும். பா.ஜனதா கட்சி மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளது. இந்த கழிவுகளை சேமிப்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் எதை எடுத்தாலும் எதிர்மறை கருத்துகளை கூறி போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பாகவே என்னவென்று தெரியாமல் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி போராட்டம் அறிவிப்பது வேதனையளிக்கிறது. எங்களின் ஆதரவு மக்களுக்குதான். ஆனால் தவறான கருத்தால் மக்களை திசை திருப்பி விடக்கூடாது என்பதில் எங்களுக்கு அக்கறை உள்ளது. அதற்காக இந்த திட்டத்தை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நான் ஆதரிக்கவில்லை. கருத்து கேட்பு கூட்டம் நடந்து அதில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி நடப்போம்.

உலக நாடுகளில் உள்ள அணுஉலைகளில் என்னென்ன கெடுதல் நிகழுமோ அதனை தடுக்க தேவையான பாதுகாப்பு வசதிகள் இந்திய அணுஉலைகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளே பாதுகாப்பு வசதிகளை நம்மிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். இந்தியாவிலேயே அணுஉலைகள் மூலம் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து முதலிடத்தில் இருக்கிறோம். புகுஷிமா சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு இதனை அணுக வேண்டாம். சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் மூலம் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது. எனவே பொதுமக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த வேண்டாம். பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர்கள் தயாசங்கர் (நெல்லை), பாலாஜி (தூத்துக்குடி) மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story