தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயில்களின் நேரத்தை குறைக்க வேண்டும் கனிமொழி எம்.பி.யிடம் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை


தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயில்களின் நேரத்தை குறைக்க வேண்டும் கனிமொழி எம்.பி.யிடம் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2019 3:45 AM IST (Updated: 17 Jun 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயில்களின் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி-நெல்லை-தூத்துக்குடி பாசஞ்சர் ரெயில்களின் பயண நேரம் 3 மணி நேரமாக உள்ளது. இந்த ரெயில்களை மின்சார ரெயில்களாக மாற்றி பயண நேரத்தில் 1½ மணி நேரமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் வழியாக செல்கிறது. இந்த ரெயிலை மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கினால் பயண நேரம் மற்றும் பயணதூரம் குறையும். இந்த ரெயிலை காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடிக்கு வந்து சேரவும், மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை- பாலக்காடு- நெல்லை ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

தூத்துக்குடி-சென்னை இடையே மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் வழியாக புதிய ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தி 3-ம் கேட், புதிய பஸ் நிலையம் அருகே அமைக்க வேண்டும். 1-ம் கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி உணவு விடுதி அமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளர் லட்சுமணன், நிர்வாக செயலாளர் ஆனந்தன், செயற்குழு உறுப்பினர் அந்தோணிமுத்துராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story