அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்


அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:15 PM GMT (Updated: 16 Jun 2019 7:15 PM GMT)

அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள கிராமம் புரவிபாளையம். இந்த கிராமத்தில் 100–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வெள்ளித்திருப்பூர்– குருவரெட்டியூர் ரோட்டில் உள்ள பெரிய குருநாதசாமி கோவில் அருகே நேற்று காலை 8.45 மணி அளவில் வந்தனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்ததுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை மண்டல துணை தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தரவேலு, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டா ரவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. அதுவும் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் முற்றிலும் நின்றுவிட்டது.

இதன்காரணமாக நாங்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்றும், கிராமத்துக்கு சென்றும் குடிநீர் பிடித்து வருகிறோம். அதுவும் போதுமானதாக எங்களுக்கு இல்லை. எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் சீர் செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 9.45 மணி அளவில் சிறைபிடிக்கப்பட்ட அரசு பஸ்சை விடுவித்ததுடன், சாலை மறியலையும் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story