லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தம்பதி பலி


லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தம்பதி பலி
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:32 PM GMT)

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மகளை பார்த்து விட்டு வந்த தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சிக்குட்பட்ட கீழபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுசேந்திரன் (வயது 49). இவர் கீழபட்டியில் உள்ள பால்கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா (35). இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சுதர்சனா திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் கனிசா கரூர் காக்காவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுசேந்திரனும், சுகன்யாவும், மோட்டார் சைக்கிளில் காக்காவாடியில் விடுதியில் தங்கி படித்து வரும் கனிசாவை பார்ப்பதற்காக சென்றனர். அங்கு மகளை பார்த்து விட்டு, அதே மோட்டார் சைக்கிளில் கணவன்- மனைவி இருவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். லாலாபேட்டை அருகே கட்டாரிபட்டி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் மீட்டனர்

வேன் டிரைவர் கடவூர் ஒன்றியம், சிந்தாமணிபட்டியை சேர்ந்த சந்தனகுமார் (25) இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வேனில் சிக்கி படுகாயமடைந்த டிரைவர் சந்தனகுமாரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சாலைமறியல்

இதையடுத்து போலீசார் சுசேந்திரன், சுகன்யாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த சுசேந்திரனின் உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் சுசேந்திரன், சுகன்யாவின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்து, குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை பார்க்க சென்ற தம்பதி விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story