பரமக்குடியில் பரபரப்பு: ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை


பரமக்குடியில் பரபரப்பு: ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம்– புவனேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகையால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமக்குடி,

ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று வழக்கம் போல் ராமேசுவரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக காலை 10.55 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயில் ராமநாதபுரம் வழியாக பரமக்குடி ரெயில் நிலையத்தை மதியம் 12.50 மணி அளவில் வந்தடைந்தது.

அப்போது ரெயிலின் ஜெனரேட்டருடன் கூடிய கார்டு பெட்டியின் கீழ் பகுதியில் திடீரென கரும்புகை வந்தது. இதை அந்த ரெயிலின் கார்டு கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் என்ஜின் டிரைவர்கள் மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில் பரமக்குடியில் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று ரெயிலில் இருந்து வந்த கரும்புகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பிரேக் ஷூவில் இருந்து கரும்புகை வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

இதனிடையே ரெயில் பெட்டியில் திடீரென புகை வந்த தகவல் பரவியதும் பயணிகள் பீதி அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டதை அறிந்ததும் அனைவரும் நிம்மதி அடைந்தனர். அதனை தொடர்ந்து சுமார் ½ மணி நேர தாமதத்திற்கு பிறகு பரமக்குடியில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.


Next Story