வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிய 2 பேர் கைது தப்பியோடிய ராணுவ வீரருக்கு வலைவீச்சு


வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிய 2 பேர் கைது தப்பியோடிய ராணுவ வீரருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 8:04 PM GMT)

வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ராணுவ வீரரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காப்புக்காடுகள் உள்ளது. இந்த பகுதியில் மான் மற்றும் வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் அவ்வப்போது மான் வேட்டையில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதும், 4 பேரை வனத்துறையினர் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரும்பாவூர் பெரிய ஏரியின் அருகிலிருந்து (பூலாம்பாடி வனப்பகுதி) ஒரு கும்பல் மானை வேட்டையாடி கொண்டு வந்துள்ளனர்.

2 பேர் கைது

அவர்களை கண்ட போலீசார் மடக்கிப் பிடித்தபோது 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அரும்பாவூரை சேர்ந்த அருள்பாண்டியன்(வயது 30), பூமிதானபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்(37) என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர் பூமிதானபுரத்தை சேர்ந்த துரைசாமி மகன் ரங்கசாமி (வயது 36) என்பதும், இவர் தற்போது ராணுவ வீரராக பணியில் உள்ளவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கைதானவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு மோட்டார் சைக்கிள், இறந்த நிலையில் 3 வயது மதிக்கத்தக்க ஒரு கிளைமான் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வேப்பந்தட்டை வனவர் குமாரிடம் அரும்பாவூர் போலீசார் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருள்பாண்டியன், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராணுவ வீரர் ரங்கசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். தேசத்தை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரர் ஒருவர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது அந்தப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story