என்.ஆர்.புரா தாலுகாவில் சம்பவம் காதல் தோல்வியால் தனியார் பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
என்.ஆர்.புரா தாலுகாவில் காதல் தோல்வியால் தனியார் பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா சிஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 28). இவர் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பஸ்சில் தினமும் பயணித்து வந்த ஒரு இளம்பெண்ணுக்கும், சந்தோசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண், சந்தோசுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
ஒரு கட்டத்தில் சந்தோசை நேரில் சந்தித்த அந்த பெண், இனிமேல் காதலை தொடர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் காதலை முறித்துக்கொண்டார். இதனால் மனமுடைந்த சந்தோஷ் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து மீண்டும் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்தார்.
இதன்காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த சந்தோஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தோஷ் செத்துவிட்டார்.
பின்னர் இதுபற்றி என்.ஆர்.புரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சந்தோசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story