தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்


தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட சி.ஐ.டி.யு. 11-வது மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் கொடியேற்றி வைத்தார். துணைத்தலைவர் கலாவதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புகுழு தலைவர் சுருளிநாதன் வரவேற்று பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஜி.நாகராசன் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் முரளி வரவு, செலவு அறிக்கையை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து, வெங்கட்ராமன், சண்முகம், ராஜி, ரங்கநாதன், ரகுபதி, ராஜேந்திரன், செல்வம், தெய்வானை ஜீவா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.

மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

தீர்மானங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. விவசாயம் இல்லை. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வாழ்வாதாரத்தை தேடி மக்கள், இளைஞர்கள் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் பிழைப்புதேடி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே தர்மபுரி மாவட்டத்தில் மக்களின் குடிபெயர்தலை தவிர்த்து சிப்காட் தொழிற்பேட்டை அமைத்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பி நீர்நிலையை மேம்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ நிறுத்துமிடம் அமைத்து கொடுக்கவேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் துப்புரவு பணியாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கவேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி பணிபாதுகாப்பு அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வரவேற்பு குழு செயலாளர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

Next Story